சாதிய ரீதியில் விமர்சித்தேனா? யுவராஜ் சிங் விளக்கம்

0
96

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிடு வரும் ‘டிக்டாக்’ காணொளிகள் குறித்து யுவராஜ்சிங் கிண்டல் செய்தார். அந்த உரையாடலின் போது வட மாநிலத்தில் குறிப்பிட்ட சமூக இன மக்களை குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தி சாஹலை விமர்சித்தார். இதனால் யுவராஜ் சிங் சாதியை குறிப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. .

யுவராஜ் சிங்கின் அந்த பேச்சு யுஸ்வேந்திர சாஹல் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதால் யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரியானா, ஹிசார் மாவட்டத்திலுள்ள ஹன்சி காவல் நிலையத்தில் தலித் உரிமைகள் ஆர்வலரான வழக்குரைஞர் ரஜத் கல்சன் என்பவர் புகாரளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாதிய ரீதியான சர்ச்சை குறித்து யுவராஜ் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பதிவில், “சாதி, நிறம், மதம் மற்றும் பாலினம் உள்பட எந்தவகையான ஏற்றத்தாழ்வுகளையும் நான் ஒருபோதும் நம்புவது கிடையாது. என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்து மக்களின் நலனுக்காக வாழ்வேன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள சுய மரியாதையை நான் நம்புகிறேன்.

யாரையும் ஒதுக்காமல் அனைத்து மக்களையும் மதிக்கிறேன். நான் எனது நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு இருந்த போது நான் கூறிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன்.

ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக என்னுடைய பேச்சு யாருடைய உணர்வையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K