திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

0
53

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

நெய்வேலி பகுதியை சேர்ந்த புதுநகர் 28 வது வட்டத்தில் வசிப்பவர் தான் விக்டர்ஜான். இவருடைய மனைவி சலோமியா. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.25 வயதாகும் சலோமிய வடலூர் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார்.

அலுவலகம் செல்லும் சலோமியா தினந்தோறும் காலையில் தனியார் பேருந்து மூலமாக தான் வடலூருக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி செல்வதால் அவருக்கும் தனியார் பேருந்து நடத்துநர் குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த சலோமியாவை, சுந்தரமூர்த்தி ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனையடுத்து சுந்தரமூர்த்தி தன்னுடைய காதலை சலோமியாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று கூறி, அவரது காதலை ஏற்க மறுத்ததோடு, சுந்தரமூர்த்தியின் நட்பையும் அத்துடன் துண்டித்துள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, சலோமியாவை பழி வாங்கும் எண்ணத்தில் அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல நேற்று காலை சலோமியா வீட்டிலிருந்து வடலூருக்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் பேருந்து நிலையத்திலிருந்து தான் பணி புரியும் நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நடந்து சென்ற சலோமியாவை திடீரென சுந்தரமூர்த்தி வழிமறித்து, சற்றும் எதிர்பாராத வகையில் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் சலோமியா மீது எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவ சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் தீ வைத்த சுந்தரமூர்த்தியை பிடித்து தர்மஅடி கொடுத்து, வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது பற்றி அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அருகிலுள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிக்கபட்ட சலோமியாவிடமும் அவர் விசாரணை நடத்தியிருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த அளித்த புகாரின் பேரில் வடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,குற்றவாளியான சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். திருமணமான பெண் மீதான ஒரு தலைக் காதலுக்காக பட்டப்பகலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண் மீது பேருந்து நடத்துநர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.