ராமேஸ்வரம் அருகே கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்! வாலிபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!

0
79

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார்.

மாலைவரை அவர் வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

அத்துடன் அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார் என சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு முகம் போன்ற பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

அவரை கொலை செய்தவர்கள் யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண் பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் பணியாற்றும் ஒடிசா மாநில வாலிபர்கள் பிரகாஷ், விகாஸ், ராகேஷ், பிரசாத், ரஞ்சன், விண்டு, உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் சந்தேகமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர், அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் வழங்கினர்.

இதன் காரணமாக, காவல்துறையினருடன் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் வாலிபர்கள் 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். அதோடு இறால் பண்ணையில் முன் பகுதியில் இருந்த வாகனம் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்து எரித்துவிட்டனர். இதன் காரணமாக, அங்கே பரபரப்பு உண்டானது.

இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் 6 பேரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கடல்பாசி சேகரித்து விட்டு தனியாக வந்த பெண்ணை 6 பேரும் வழிமறித்து புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 6 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்திருந்தார்கள். இதனால் 6 வாலிபர்களும் சிகிச்சை பெறுவதற்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், கூட்டு பலாத்காரம் செய்து பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

வடமாநில வாலிபர்கள் பணியாற்றிய இறால் பண்ணையை மூட வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வடகாடு மீனவர் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

இப்படி போராட்டம் நடத்தியவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அங்கு 6 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

காவல்துறை அதிகாரிகள் வருவாய்த் துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை வெகு நேரத்திற்குப் பின்னர் கைவிட்டனர்.

அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிகிச்சையிலிருந்து வருவதால் அந்த வாலிபர்களிடம் காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்த நிலை இருக்கிறது.

சிகிச்சை முடிவடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு அவர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.