மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

0
89

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. நாள்தோறும் ராணுவத்திற்கு எதிராக பல்லாயிரக் கணக்கானோர் போராடி வரும் நிலையில், ராணுவத்தின் அடக்குமுறையால் இதுவரை 1500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், மியான்மரில் நடக்கும் நிகழ்வுகளை விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், பாதுகாப்பு அவை உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு அவையில் மியான்மரில் நடக்கும் அவலங்கள் குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதில், மியான்மரில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளாமல் விட்டால், மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய தவறாக அமையும் என சீனா தெரிவித்துள்ளது. இதை இப்போது தடுக்காவிட்டால், உலகம் முழுவதும் அதே போன்று உள்நாட்டுப் போர் பரவும் ஆபத்து இருப்பதாக சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய, குழுவை அனுமதிக்க வேண்டும் என்றும், மக்களாட்சியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்நாட்டு ராணுவத்திற்கு ஐ.நா பாதுகாப்பு அவை அறிவுறுத்தியுள்ளது.