நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக கூட்டணியில் தொடருமா பாஜக? இன்று முடிவை அறிவிக்கும் அண்ணாமலை!

0
75

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா அல்லது இருக்காதா? என்பது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை பலப்படுத்த மாவட்ட வாரியாக சென்று கட்சியினரை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது ஒவ்வொரு வார்டிலும் பாஜகவிற்கு ஏற்கனவே இருந்த ஓட்டு சதவீதம் அதிகரித்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தொடருமானால் பாஜகவிற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே கிடைக்கும். அதில் பாஜக வெற்றி பெற்றாலும் மாநிலம் முழுவதும் பாஜக பெரும் ஓட்டு சதவீதம் மற்ற கட்சிகளுடன் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டால் அதிமுக வாக்குகளும் நிச்சயமாக கிடைக்கும். திமுக அதிமுகவிற்கு அடுத்ததாக 3வது பெரிய கட்சி என்பது உறுதி செய்யப்படும். ஆகவே தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்கள் பங்குபெற்ற மாநில மைய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதனை அடுத்து மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. சென்னை தி நகரில் இருக்கின்ற கட்சி அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.