12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்?

0
92

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று உண்மை நிலையை விளக்கும் விதமாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க கோரி எதிர்க்காட்சிகளை சார்ந்தவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு சபையை அமைதியாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோருடன் சபையிலும், சபைக்கு வெளியிலும், பலமுறை உரையாற்றி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை உள்ளிட்டவற்றை நீக்குவது தொடர்பாகவும், விவாதம் செய்திருக்கிறார். ஆனாலும் யாருமே வெங்கையா நாயுடுவின் சமரசத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் வருத்தம் தெரிவித்ததன் காரணமாக, தடையை நீக்கி விடுவதாக வெங்கையாநாயுடு கூறியிருந்தார். இதனை ஒரு சில கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் எதிர்க் கட்சிகளின் சார்பாக யாராவது வருத்தம் தெரிவித்தால் போதும் என்று இறங்கி வந்து கூட அந்த கருத்து ஏற்கப்படவில்லை. அப்படி வருத்தம் தெரிவித்ததால் தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று குறிப்பிட்ட யோசனையை கூட எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடந்த 2010ஆம் வருடம் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சி அல்லாத 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி வருத்தம் தெரிவித்தார், இதுவும் எதிர்க்கட்சிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பதற்காக வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஆனால் அந்த குழுவில் சேரவும் ஒரு சில எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க பல்வேறு முயற்சிகளை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா முன்னெடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர், இதுதான் உண்மையான நிலவரம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.