நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! முதல்-மந்திரி பொதுமக்களை நேரில் சந்திக்காதது ஏன் பாஜக கடும் விமர்சனம்!

0
60

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றியதாவது,

தமிழ்நாட்டில் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஏன் பொதுமக்களை நேரில் சந்திக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. அதோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு தருவதாக சொன்ன 1000 ரூபாய், வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவார்கள்.

அதற்கு பயந்ததால் கூட அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் வராமல் இருக்கலாம் அதனால் தான் யார் யாரையெல்லாமோ பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

தமிழக அரசின் சார்பாக பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. நகை கடன் தள்ளுபடி செய்யாததால் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் வழங்கிய 517 வாக்குறுதியை முழுமையாக 7வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாத விடியாத அரசு இது என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்.

5 நாட்களுக்கு முன்பு சென்னையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது நீட் தேர்வு ஆதரவு வழங்கியதால் குண்டு வீசியதாக தெரிவித்தார்கள்.

தற்சமயம் கூலித் தொழிலாளி, விவசாயி மகள் என்று சாதாரண மக்களும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்காரணமாக, அணுகுண்டு போட்டால் கூட நீட் தேர்வை நாங்கள் ஆதரிப்போமென்று தெரிவித்திருக்கிறார்.

தனியார் மருத்துவக் கல்லூரியிலும், அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒரே விதமான கட்டணம் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றிபெற செய்ய வேண்டுமென்று அவர் உரையாற்றியிருக்கிறார்.