தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

0
81

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

மழை பெய்யும் நாட்களில் சென்னை மூழ்குவதும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தில் சென்னை தவிப்பதும் காலம் காலமாய்த் தொடர்வது . 2015 வெள்ளத்தின் போது இன்னும் பத்தாண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது என்றனர் . நான்காம் ஆண்டே வீதியெங்கும் காலிக் குடங்கள் போராட்டங்கள் .

பள்ளிக்கூடங்கள் முழு வேலை நாளை அரைநாளாய்க் குறைத்துவிட்டன… கைகழுவதற்கும் கழிப்பறை பயன்பாட்டிற்கும் போதுமான நீர் இல்லை . உணவகங்கள் மதிய உணவை நிறுத்தி விட்டன . டிபன் வகைகளை விட சாதம் சாம்பார் ரசம் கூட்டு என்று நீர்ப் பயன்பாடு அதிகமாய் இருப்பதே இதற்குக் காரணம் . ஐடி ஊழியர்கள் வேண்டுமானால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் , மற்ற அலுவலகங்கள் என்ன செய்வது ? மருத்துவமனைகளின் நிலையோ இன்னும் கவலைக்கிடம் . தீர்வுதான் என்ன?

சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் அமைச்சர் வேலுமணி . தன் வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்பதைத்தான் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று கூறி விட்டாரோ ?

மழையில் வெள்ளத்திலும் கோடையில் பஞ்சத்திலும் அவதியுறுவதுதான் சென்னை மக்களின் தலைஎழுத்தா ? ஆட்சியாளர்களின் சுட்டுவிரல்கள் அமைதியாய் நீள்கின்றன இயற்கையை நோக்கி …இது நிஜமா ? கடந்த வருடம் மழை இல்லாததுதான் இப்பஞ்சத்திற்கு காரணமா ? இல்லை ஆளும் அரசின் திட்டமற்ற நீர்மேலாண்மையா ? செல்வி ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்கிறதா ? அரசின் அனுமதி பெற்று கட்டப்படும் எல்லா கட்டங்களிலும் இருக்கிறதா ??? கண்காணிப்பது யார் ? கஷ்டப்படுவது யார்?

சென்னையில் சென்ற வருடம் பெய்த மழையின் அளவு 800 மில்லி மீட்டர் . பெங்களூருவின் மழை அளவு 860 மிமீ . 60 மிமீ வித்தியாசம் இரண்டு நகரங்களிடையே , ஆனால் பெங்களூருவில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் சென்னையில் மட்டும் எப்படி ? வருடத்திற்கு வெறும் 600 மிமீ மழை பெறும் இராஜஸ்தானில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் 3600 ஏரிகளை கொண்ட சென்னை மாநகரில் மட்டும் எப்படி ?

ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை விட்டுவிடலாம் இருக்கும் ஏரிகள் ஒழுங்காக தூர் வாரப்படுகிறதா ? குவாரிகளிலில் இருக்கும் நீர் ஏன் ஏரிகளில் இல்லை ? ஒவ்வொரு ஆண்டும் தூர்வார மராமத்துப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகள் எங்கு செல்கின்றன?

2015 ல் 300 டிஎம்சி அளவு பெய்த நீரில் பாதி கடலில் கலந்ததாதவே இருக்கட்டும் , மீதித் தண்ணீரை ஏரிகளிலும் குளங்களிலும் சரியானபடி சேமித்திருந்தால் இந்தப் பஞ்சம் வந்திருக்காதே . சென்னையில் மட்டும் 70 கோவில் குளங்கள் உள்ளன. இதோ மழைக்காலம் நெருங்குகிறது . அதற்கு முன் இக்குளங்களும் ஏரிகளும் ஏட்டில் இல்லாமல் உண்மையிலேயே தூர்வாரப்பட்டால் மட்டுமே , ஒவ்வொருவரும் தன் வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி சேமித்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு நீர் இருக்கும் . அரசின் மெத்தனம் களையப்பட வேண்டும் , உடனடித் தீர்வாய் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மட்டும் மெட்ரோ லாரிகளில் நாள் ஒன்றிற்கு 900 லாரிகள் தண்ணீர் பெறப்படுகிறது . நாம் அழிந்தது மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் அழிக்க ஆரம்பித்து விட்டோம் .

அரசின் நீர் மேலாண்மை, ஏரிகள் குளங்கள் சீரமைப்பு பாதுகாப்பு , மறுசுழற்சி முறை , மழைநீர் சேமிப்பு . நம் அட்சய பாத்திரம் நிரம்பியே இருக்கிறது ஆனால் நாம் ஓட்டைக் குடங்களையே நாடுகிறோம் .

அரசின் பங்களிப்பு மட்டும் போதாது ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையுணர்ந்து இருக்கும் நீரை சிக்கனமாய் செலவழித்தும் இனி வரும் தலைமுறைக்காய் நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பும் செய்ய வேண்டும் . அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டாய நீர் மறுசுழற்சி இருந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலை வர வேண்டும் . குற்றாவாளிகள் என கை காட்ட ஆரம்பித்தால் தமிழ் நாட்டை ஆண்ட , ஆளும் அனைவரும் தான் . இது தான் வழியென்றறிந்த பின் பின்பற்றத் தயக்கமென்ன … தமிழ்நாட்டு மக்களே செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ?

author avatar
Parthipan K