இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

0
110

இந்தியாவை பொருத்தவரையில் சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று வைரஸ் பாதிப்பு முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அச்சுறுத்தல் காரணமாக, அன்றைய தினத்திலிருந்து 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய்த்தொற்று இந்தியாவில் ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் முதல் அலையை விடவும், அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அதோடு உயிர் இழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் காரணமாக இந்த நோய்த்தொற்று சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து இருந்தாலும் நாளுக்கு நாள் புதிய பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. அதேபோல உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.

ஆனாலும் நம்முடைய நாட்டில் எதிர்வரும் காலத்தில் இதற்கான நிலைமை மிகவும் மோசம் அடையலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவுவதற்கு பி 1617 உருமாறிய வைரஸ் பாதி காரணம், மீதி காரணத்திற்கு பொது மக்கள் முக கவசம் அணியாதது, அதோடு தனிமனித இடைவெளியை பின்பற்றாதது தான் என்று தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் இருக்கின்ற 130 கோடி மக்கள் தொகையில் 70 முதல் 80 சதவீதம் நபர்கள் வரை இந்த தடுப்பூசியை செலுத்தி முடிக்க பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரை நாட்டில் மக்கள் தொகையில் 2% மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இவ்வாறான சூழலில் இந்த தொற்று மேலும் உரு மாற்றம் அடைந்தால் அது மிகவும் ஆபத்தில் போய் முடிந்து விடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக இந்த நிலை ஏற்படுமானால் அதனை தடுப்பூசிகள் கூட தடுத்துவிட இயலாத சூழல் உண்டாகிவிடும். மாறாக அது ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு மாபெரும் பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.