ஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி!

0
86

ஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி!

இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதையடுத்து இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் யுஏஇ-ல் நடைபெற்றது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் அந்தத் தொடரின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின், எஞ்சியிருந்த ஐபிஎல் தொடர் அக்டோபர் மாதம் யுஏஇயில் நடைபெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் எவ்வளவு இருந்தாலும் சரி, இந்த முறை ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும். இதில் உறுதியாக உள்ளோம். இந்த முறை போட்டிகளை மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லீக் போட்டிகள் மகாராஷ்டிராவிலும், ப்ளே ஆஃப் சுற்றுகள் அனைத்தும் அகமதாபாத் நகரத்தில் நடைபெறும். ஒருவேளை கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகமானால் அப்போது, வேறு எங்காவது நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த முறை இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் பல இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. எனவே இந்த முறையும் அப்படி ஆகுமோ என்கிற அச்சத்தில் வீரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அனைத்து அணிகளும் போக்குவரத்து செலவுகளை குறைக்க இந்தியாவில் தான் போட்டிகளை நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. இதன் காரணமாகவே பிசிசிஐ-ம் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K