அந்த விசாரணை எப்ப தான்ப்பா முடியும்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

0
81

சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் இருக்கின்ற சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பேருந்துகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தி தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த கலவரத்தை அடுத்து அந்தப் பள்ளி மூடப்பட்டது. இந்த சம்பவம் நடப்பாண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. தற்சமயம் இந்த பள்ளி வளாகம் சீர் செய்யப்பட்டு விட்டது. அரசு அமைப்பை குழு ஆய்வு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் பள்ளியை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர் சுரேஷ்குமார் முன்பு விசாரணை வந்தது.

எல் கே ஜி முதல் வகுப்புகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அரையாண்டு, இறுதி ஆண்டு தேர்வுகளுக்கு தயாராக வேண்டி இருப்பதால் பள்ளியை திறப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசுக்கு நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு சமீபத்தில் மறுபடியும் விசாரணைக்கு வந்தது.

காவல்துறை சார்பாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் புலன் விசாரணை சற்றேற குறைய முடிந்து விட்டாலும் முழுமையாக புலன் விசாரணை முடிவடைய இன்னும் அவகாசம் தேவையா? என்பதை சிபிசிஐடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும். பள்ளி கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி கூடுதல் எஸ்பியை வழக்கில் இணைத்து அறிக்கை வழங்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் புலன் விசாரணை முழுமையாக முடிவடைந்து விட்டதா? அப்படி முடிவடைந்து இருந்தால் எப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக வரும் 30ம் தேதிக்குள் சிபிசிஐடி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் நீதிபதி.

புலன் விசாரணை முடிவடையவில்லை என்றால் எவ்வளவு தினங்கள் அதற்கு தேவைப்படும் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.