மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்

0
66

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்

இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. ரஷிய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

பல உலக நாடுகள் உக்ரைன் மீதான இந்த போரை நிறுத்தும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல உலக நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்துள்ளன.

தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் இரண்டு அணுமின் நிலையங்களை கைபற்றியுள்ள ரஷிய ராணுவம் உக்ரைனின் முக்கிய நகரங்களையும் கைபற்றியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் – ரஷியா இடையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், உக்ரைன் ஆயுதங்களை கீழே போடும்வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இந்த போரின் காரணமாக  உக்ரைனில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எங்கள் நாட்டை அழிக்கும் நோக்கமுடையவர்களை மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K