நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

0
75

நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம்? என யோசித்தால் பல விஷயங்கள் தோன்றுகின்றன.

அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது, சாட்சிகள் இல்லாமலிருப்பது, காவல்துறையினர் சரிவர விசாரணை செய்யாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதில் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் யார்? என்று யோசித்தால் மண்டையை பிய்த்துக் கொண்டுதான் நிற்கவேண்டும்.

எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதற்கேற்ற விசாரணை நடத்துமளவிற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இருப்பதில்லை. இன்றளவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் 5வது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வரராவ் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் என சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவில் உச்சநீதிமன்றத்திற்கு வருகின்ற இருபத்தி 24ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக, நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்களுக்கு நேற்று தான் கடைசி பணி நாளாக இருந்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் நீதிபதி நாகேஸ்வரராவ் உரையாற்றியதாவது, உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் வழக்கறிஞர் பணிமீதான பற்று தற்போதும் நீடித்து வருகிறது என தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் சக நீதிபதிகள் இடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நீதிபதிகள் துறவிகள் அல்ல சில சமயங்களில் பணிச்சுமை காரணமாக, எங்களுக்கும் நெருக்கடி ஏற்படும். நானும் அதுபோன்ற சூழ்நிலை சந்தித்து வந்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு அப்படியான நெருக்கடியான காலகட்டத்தில் நான் கோபப்பட்டு தங்களிடம் பேசியிருக்கலாம். என்னுடைய வார்த்தைகள் ஒரு சிலரை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நாங்கள் பாரபட்சமில்லாமல் தான் நீதி வழங்குகின்றோம்.

ஆனால் அது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், ஒரு தரப்புக்கு வருத்தத்தையும், கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் பேசினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சொலிசிட்டர் ஜெனரல் வேணுகோபால், உள்ளிட்ட பலரும் நீதிபதி நாகேஸ்வரராவ் ஐ பாராட்டி உரையாற்றினார்கள்.