இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

0
72

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறுகள் மற்றும் ஊழல்கள் உள்ளிட்ட செயல்களில் அவர்கள் செய்திருக்கும் பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வருவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது திமுக அரசு.

அந்த விதத்தில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரை பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதிலும் திமுக தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அதிமுகவின் பலத்தை குறைப்பதற்காக அந்த பகுதிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு மாநில அரசு சோதனை செய்து அவர்கள் செய்த ஊழலை அம்பலப்படுத்தி வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் கோயம்புத்தூர் மற்றும் கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஜாலம் பலிக்கவே இல்லை சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களை குறிவைத்து சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசலில் நேற்று அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கொண்டு தலைவாசலில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது 90% சேலத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்த போது அவருக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். அதை எல்லாம் தாண்டி 11 ஆண்டு காலம் ஆட்சியை கைப்பற்றி மிக திறமையாக நடத்தினார் என கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் கட்சி பிளவுபட்டது அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சி ஒருங்கிணைத்து நடத்திவந்தார். இந்த இரு பெரும் தலைவர்களால் தான் தமிழகம் உயர்வு பெற்றது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதன் காரணமாக தான் நாட்டில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் தற்போது வரையில் விளங்கி வருகிறது என கூறியிருக்கிறார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் 435 மருத்துவம் படிக்க காரணமாக இருப்பது அதிமுக தான், அந்தத் திட்டத்தை திமுக விரிவுபடுத்தியது திமுக தேர்தல் சமயத்தில் பொய்யான நிறைவேற்ற இயலாத வாய்ப்புகளை வழங்கியது. அதில் 202 வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். நகை கடன் தள்ளுபடி செய்தது அதிமுக என்ற காரணத்தால், அதில் முறைகேடு என்று தெரிவித்து 53 கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலமாக 5 சதவீத நபர்கள் கூட இந்தத் திட்டத்தினால் பயன் பெற மாட்டார்கள் கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி முடித்தோம் ஆனால் இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வில்லை வெற்றி பெற்றவர்களை கூட தோல்வியடைந்தவர்கள் என அறிவித்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். திமுகவினர் முறைகேடாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் எதிர்வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்திருக்கிறார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இருக்காது என்று சொன்னார்கள் ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியை நிலை நிறுத்தி செயல்படுத்தி வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் கட்சி இருக்காது என்று தெரிவித்தார்கள். ஆனால் திமுகவின் கனவானது கானல் நீராகவே சென்றுவிட்டது எந்த காலத்திலும் அதிமுகவை விட இயலாது என கூறியிருக்கிறார் இபிஎஸ்.

ஐந்து மாத காலமாக தடுப்பூசி முகாம் என்ற பெயரில் மெகா பொய் பேசி வருகின்றார் முதலமைச்சர் அதிமுகவினர் மீது பொய் வழக்கு உள்ளிட்டவற்றை போட்டு கட்சியை உடைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அது எப்போதும் நடக்காது கட்சி ஆரம்பித்து 50 வருடங்களில் 30 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருந்திருக்கிறது.

அதிமுகவை சார்ந்தவர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. பொய்யான வழக்குகளை கண்டு அதிமுக எப்போதும் பயப்படாதே என்று கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.