கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
71

கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர்.

நிலைமையை உணர்ந்த கர்நாடக அரசும் மாணவர்கள் அனைவரும் சீருடையில் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனிடையே கடந்த வாரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அம்மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மாணவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அதனை தொடர்ந்து, முதற்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று முன்தினம் கர்நாடகம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வரத் தொடங்கினர்.

இந்த நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் நான்கு பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும்  நிலையில், முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் கல்லூரிக்கு அழைத்து செல்லும் புகைபடத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ‘எங்கள் பாரதம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்ற கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

author avatar
Parthipan K