ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

0
62

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே 14 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன பர்ஸ் கிடைத்துள்ளதாக பான்வெல் ரயில்வே காவல்துறையினர்,  ஹேமந்த் படல்கருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ் கிடைத்துள்ளதாகவும் அதனை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்கள் கழித்து இன்று படல்கர், பான்வெல் ரயில்வே காவல்நிலையத்திற்கு சென்று தமது பர்ஸையும் அதில் இருந்து ரூ.300 பணத்தையும் பெற்றுள்ளார்.

தபால் அட்டை பணிகளுக்காக ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.500 பணமதிப்பிழப்பு காரணமாக செல்லாது என்பதால், அப்பணம் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்ட பிறகு படல்கரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்ஸை திருடிய நபரையும் கைது செய்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K