பணியில் இடையூறு! காவல் நிலையத்தில் புகாரலளித்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி!

0
70

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் திமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் என்று சம நிலையில் இருக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற சுதா ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்.

இந்த நிலையில் இவர் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த புகார் மனுவில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற தன்னுடைய கடமையை செய்ய விடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை உண்டாக்கியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9வது வார்டு உறுப்பினர் அதிமுகவைச் சார்ந்த நல்லுசாமி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலக பணியை செய்வதில் இடையூறு உண்டாக்கி வரும் திமுகவைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி மற்றும் அலுவலக பணியில் ஒத்துழைப்பு வழங்காத ஊராட்சி செயலாளர் நளினி, அவருடைய கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து கணினி ஆபரேட்டர் என்று தெரிவித்துக் கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் புகார் வழங்கியுள்ளார்.

இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்டு நேற்றைய தினம் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஷீலா குமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

தொடர்ச்சியாக ஊராட்சி மன்ற தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.

புகார் மனு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் தொடர்பாக விரிவாக கூறப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.