குரங்கிற்கு கோவில், சிறப்பு பூஜை; வினோத கிராமம்

0
136

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு MK நகர் பகுதியில் இருபது 20 வருடங்களுக்கும் மேல் ஒரு குரங்கு சுற்றித்திரிந்தது. அந்த குரங்கு தொடக்கத்தில் அனைவரிடமும் நன்றாக பழகி வந்தாலும் நாளைடைவில் பல இடையூறுகளை கொடுத்து வந்தது. அதனால் அந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளின் மூலம் அந்த குரங்கை பிடித்து சென்று நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் அந்த குரங்கு மீண்டும் பழையபடி அந்த கிராமத்திற்கு வந்து உலாவி வந்தது. பின்னர் கிராமவாசிகளும் அந்த குரங்கிற்கு தேவையான உணவுகளை வழங்கி வந்தனர். அந்த குரங்கும் அந்த கிராமத்தின் செல்லமாகவே மாறியது. இந்த நிலையில் குரங்கிற்கு வயது முதிர்வு ஏற்பட்டு உடல்நிலையும் சோர்வாக காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இந்த குரங்கை கடித்து குதறின. உடலில் காயம் ஏற்பட்ட குரங்கு தரைக்கு வராமல் மரங்கள் மற்றும் வீடுகளின் மேலேயே தங்கி வந்தது.அந்த குரங்கு கடந்த 25ம் தேதி இறந்தது. அந்த கிராம மக்கள் குரங்கின் இறப்பால் அதிர்ச்சியையும் சோகத்தையும் அடைந்தனர். மேலும் அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் ஒருவர் இறந்தது போன்று துக்கம் அனுசரித்தனர். சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டு குரங்கிற்கு இறுதி சடங்குகள் மற்றும் நல்லடக்கம் செய்த அப்பகுதியினர் அந்த இடத்தில அந்த குரங்கிற்கு கோயில் கட்டவும் தீர்மானித்து அதற்கான பூஜைகளையும் செய்தனர்.

author avatar
Parthipan K