விஜய் மல்லையாவுக்கு செக் !!!

0
111

இந்திய வங்கிகளில்  ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜய் மல்லையா வங்கிகளுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை திரும்ப பெறுவதற்கு, அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 15 வங்கிகளின் கூட்டமைப்பு மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன..

வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதன் மூலம் மல்லையாவின் யுபிஹெச்எல் நிறுவனத்தின்  வசமுள்ள  பங்குகள்  உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தலைமறைவு நிதி மோசடியாளா் சட்டத்தின்கீழ், மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அந்தச் சட்டத்தின்கீழ், அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.இந்நிலையில், மல்லையாவுக்கு அளித்த கடனை ஈடுசெய்யும் வகையில், முடக்கப்பட்ட சொத்துகளை விற்பதற்கு அனுமதி கோரி எஸ்பிஐ உள்ளிட்ட 15 வங்கிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இதன் மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்றது. அப்போது, வங்கிகள் சார்பில் மூத்த வழக்குரைஞா் ராஜீவ் பாட்டீல் ஆஜராகி வாதிட்டார். விஜய் மல்லையா சார்பில் மூத்த வழக்குரைஞா் அமித் தேசாய் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி, வங்கிகள் அளித்த கடனை ஈடுசெய்யும் வகையில், முடக்கப்பட்ட அசையும் சொத்துகளை விடுவித்து உத்தரவிட்டார். எனினும், இந்த விவகாரத்தில் மல்லையா தரப்பினா் மும்பை உயா்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, வரும் 18-ஆம் தேதி வரை இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

author avatar
Parthipan K