தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

0
97
T. Velmurugan
T. Velmurugan

தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக மக்களுக்கான முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஓதுக்கீடு நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர்வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, வரலாற்று வகையில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து வரும் சமூகநீதியை காலி செய்து விடும்.

ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்று கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் முன்னேறத் துடிக்கிறபோது அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே இழுத்துச் செல்லும் வகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, மோடி அரசின் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பையும், பொருத்திப் பார்த்தால், இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தால் இந்தியாவிலேயே மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகப்போவது தமிழினம் தான்.

தமிழகத்தில் 3 விழுக்காடு உள்ள பிராமணர்களும், 1 விழுக்காடு உள்ள இதர பிராமணர் அல்லாத சாதிப் பிரிவுகளும்தான் – இந்திய அரசு வழங்கியுள்ள இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் ஆவர். போட்டியே இல்லாமல் ஆதிக்க சாதியினர்க்கு மூன்று மடங்கு இடத்தைக் கொடுத்து விடுகிறார்கள். அதுவும் இல்லாமல், பொதுப்போட்டிக்கு உள்ள மீதமுள்ள 21 விழுக்காட்டு இடங்களிலும் அவர்கள் வந்துவிடுவார்கள்.

இந்த பேராபத்தை உச்சநீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது. இடஒதுக்கீடு நீண்டகாலமாக செயலில் இருக்கும் தமிழகத்தில், 69 விழுக்காட்டு இடஒதுக்கீடு செயலில் இருக்கும் தமிழகத்தில் –இப்போதும்கூட தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இதனால் தான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ப இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பட்டியலை அப்போது ஆண்ட காங்கிரசுக் கட்சியும் வெளியிடவில்லை. இப்போது வந்துள்ள பாஜகவும் வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டால், தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, உரிய பிரதிநிதித்துவம் பெற்றுவிடுவார்கள் என காங்கிரசும், பாஜகவும் நினைக்கிறது.

எனவே, இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு வளைக்கத்தக்கது தான் என்று உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில், தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய, இட ஒதுக்கீட்டின் அளவை, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிர்ணயிக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று அவர் அதில் கூறியுள்ளார்.