வன்னியர் இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓய மாட்டேன்- மருத்துவர் ராமதாஸ்.!!

0
74

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்திற்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் பாமக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்; அதில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5% சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். அதன் வாயிலாக நம் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும் என நம்பினோம்.

ஆனால், வன்னியர் சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். சமூக நீதிக்காக போராடும் நமக்கு இது பெரும் பின்னடைவுதான். ஆனால், இதிலிருந்து மீண்டு இன்னும் பிரம்மாண்டமாக எழுச்சி பெறும் வலிமையும் திறனும் நமக்கு உண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி நீங்கள் கலங்க வேண்டாம் உங்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்க வேண்டியது என் கடமை. அதை நிறைவேற்றாமல் நான் ஓயமாட்டேன். அதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் வன்னியர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்போம் கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும் நீதி வெல்லும். என அவர் கூறியுள்ளார்.