செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்

0
196

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்

திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளி கொண்டே போகும். அதில் முக்கியமான காரணமாக அமைவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை. இந்த செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை போக்க எளிய பரிகார முறையை இங்கே பார்க்கலாம்.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றெல்லாம் ஆன்றோர்கள் திருக்கோவிலின் இன்றியமையாமையைக் குறித்து அற்புதமாகக் கூறியுள்ளனர்.இந்த மொழிக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது பூவிருந்தவல்லி இருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில். பூவிருந்தமல்லி உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் மகுடம் வைத்தாற்போல் அமைந்து உள்ளது இத்திருக்கோயில்.

கோவிலுக்கு செல்லும் வழி:

பூவிருந்தவல்லி இருந்து பெங்களூர் நெடுஞ்சாலையின் தென்பாலதாக அமைந்துள்ள இத்திருக்கோவில், இதன் இராஜ கோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது, வடக்கு குபேரனுக்கு உரிய திசை குபேர சம்பத்துடன் வாழ அருள் புரிபவர் வைத்தியநாதர் என்பதனை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது இக்கோவிலின் கோபுரம். திருமுல்லைவாயில், திருப்பாசூர், திருமழிசை, திருக்காரணீச்சரம் போன்ற ஆலயங்களில் இராஜகோபுரம் தெற்கு நோக்கியபடி இருப்பது போன்று இத்திருக்கோவில் இராஜ கோபுரமும் 3 அடுக்குகளுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது தனி சிறப்பு.

கோவிலின் அமைப்பு:-

இந்த கோவிலில் கிழக்கு வாயிலில் சிறிய அளவில் ஒரு ராஜகோபுரம் உள்ளது. எதிரில் அருமையும், பெருமையும் வாய்ந்த மங்கள தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. குளத்தின் கீழ்க்கரையில் பாணலிங்கம் ஒன்று உள்ளது. அதனை அடுத்து வேம்படி நீழலில் அழகிய பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது.குளத்தின் வடமேற்கு மூலையில் பழமையான விநாயகப்பெருமான் அரசமர நீழலில் எழுந்தருளி உள்ளார்.

நோய்நொடி பிணி பீடைகள் அகல மக்கள் நீராடும் திருக்குளம் இது. தேவேந்திரன் தமக்குற்ற நோய் நீங்க இத்திருக்குளத்தில் நீராடினான் என்கிறது வரலாறு. கண்பார்வையற்ற தண்டியடிகள் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத்தில் தூர் எடுத்துத் திருப்பணி செய்து கண்ணொளி பெற்றார் என்கிறது பெரியபுராணம்.

கிழக்கு நுழைவாயிலில் நுழைந்தவுடனே தென்படுவது கொடிமரம், பழைய கொடிமரம் பழுதுற்ற தால் புதிய கொடிமரம் ஒன்று சிறப்பான முறையில் அமைக்கப்பெற்றுள்ளது. அதை அடுத்து நான்கு கால்களுடன் கூடிய மண்டபம், திரு மடைப்பள்ளி, திருநந்தவனம், வாகன மண்டபம், அரசடி நாகத்தம்பிரான் மேடை,ஆலய அலுவலகம் என்று அடுத்து அடுத்து மண்டபங்கள் அணிசெய பழமை மாறாது விளங்குகிறது பிரகாரம் .

திருக்கோயிலின் உள் ஆவரணத்திற்கு முன்பாக அழகியதோர் முகப்பு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் கருங்கற்றூண்கள் தாங்கக் கற்பலகைப் பாறைகள் மேலே பாவப்பெற்று விளங்குகிறது. இதனைக் கல்யாண மண்டபம் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அடுத்து இங்குதான் சனிபகவான் கிழக்கு நோக்கித் திருநள்ளாறு திருத்தலம் இருப்பது போன்றே எழுந்தருளியுள்ளார். இதை எல்லாம் கடந்து இறைவனின் மண்டபத்தின் நுழைவாயிலில் நுழையும் முன்பு தொன்மை வாய்ந்த துவார கணபதியும், திருமுருகப் பெருமானும் எழுந்தருளி உள்ளனர் அழகிய கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய இம்முகப்புத் திருவாயிலைக் கடந்தவுடன்

அதனையடுத்து அம்மையப்பபிள்ளையாம் சோமாஸ்கந்தமூர்த்தி மற்றும் உலாத்திருமேனிகள் அமைந்த சந்நிதி உள்ளது. மேற்குப் பகுதியில் வீரபத்திரர், விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, நந்தி, கும்பேசுவரர் முதலிய சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. பூ இருந்த வல்லியாம் அன்னை திருமகள், ஆதிசங்கரர் முதலியனவர்களின் ஒன்றாக எழுந்தருளியுள்ளனர்.

அடுத்ததாக ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் வேட மங்கை, வேழமங்கை என்று போற்ற பெறும் வள்ளி தெய்வானையுடன் கூடிய முத்துக் குமாரசுவாமி தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். வடகிழக்குப் பகுதியில் அம்பலக்கூத்தனாம் சிவகாமசுந்தரியம்மை உடனாய நடராஜப்பெருமான் சபை உள்ளது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் திருமேனிகள் தனி ஒரு மேடையில் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம். அருகில் பைரவருடைய திருமேனியும் உள்ளது. சந்திரன் தனியே ஒரு மடத்தில் எழுந்தருளி யுள்ளார். இதை எல்லாம் கடந்து நாம் அடைவது அருள்மிகு வைத்தியநாத சுவாமி எழுந்தருளியுள்ள கருவறை என்கிற கர்ப்பகிரகம்.

கூடக்கோயில் வகையைச் சார்ந்த ஆலயமாக இருப்பினும் கருவறை அமைந்துள்ள பகுதி சற்று உயரமாக விளங்குகிறது. அழகிய திரிதள விமானத்தின் கீழதாக அமைந்துள்ள கருவறை பல தெய்வீக மகிமைகளைத் தன்னகத்துட் கொண்டு வசீகரிப்பதாய் உள்ளது. யாவற்றிற்கும் மகுடம் வைத்திருப்பது போல நடுநாயகமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் அருள்மிகு வைத்தியநாதசுவாமி.

“ஈர்த்து என்னை யாட்கொண்ட எந்தை சிவ பெருமானின் அருட்கலைகள் எக்காலத்திலும் நீங்காது உறைவது சிவலிங்கத் திருமேனிகளில் தான்” என தேவேந்திரன் தன் உடற்குற்ற பிணியை நீக்கிக் கொள்ள வேண்டி இந்நகரத்திற்கு வந்து சிவலிங்கத் திருமேனி ஒன்றைத் ஸ்தாபித்து நித்திய வழிபாடாற்றி தவம் செய்தான். கண்டகண்கள் புனல்பாய அழுது தொழுது வணங்கி நெக்குருகினான் இந்திரன்,நோய் நீங்கியது, சகல சௌபாக்கியங்களையும் பெற்றான் இந்திரன்.

இந்திரனுடைய வேண்டுகோளின்படி “எக்காலத்தும் நீங்காது இத்திருமேனியிலேயே எழுந்தருளியிருந்து உம்மைத் தொழுது வணங்குவோரது துயர்களைந்தருள வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள் தேவர்கள். அன்று முதல் ‘வினை தீர்த்தான்’ என்ற திருப் பெயர் வைத்தியநாதசுவாமிக்கு விளங்கலா யிற்று என்கிறது புராணம் .

சோழநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரன் கோயிலில் எவ்வாறு அங்காரகன் (செவ்வாய்) பூசித்த தலமாக விளங்குகின்றதோ அதை போல பூவிருந்தமல்லி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் விளங்கிறது .

செவ்வாய் தோஷம் நீங்க :-

ஆலயத்த்தின் மூலவர் திருமண தடை, வரப்பிரசாதி,செவ்வாய் தோஷம் ,உத்தியோகம்,சனி தோஷம் கல்வி என்று எந்த நோக்கத்துக்காக வேண்டினாலும் கண்டிப்பாய் நிறைவேறும் என்பது இங்கு வாழும் பக்தர்களின் ஐதிகம்.

குறிப்பாக இக்கோவிலில் 11 செவ்வாய் கிழமை விளக்குகேற்றி சிவனை வழிப்பாட்டு வந்தால் பதினாறு வாரங்கள் முடியும் முன்னே திருமணம் தடை நீக்கும் என்கிறார்கள்.மேலும் சனிகிழமைகளில் இங்கு சிறப்பு பூஜை நடைப்பெறும்.

விழாக் காலங்கள் தவிர,மற்ற தினங்களில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடைதிறந் திருக்கும் ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ள அமைப்பில் அனைத்து பரிவார மூர்த்திகளும் சூழ அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் பூவிருந்தவல்லி அருள்மிகு தையல்நாயகி அம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில். கிடைத்தற்கு அரிதாகிய மானிடப் பிறவி பெற்ற மக்கள் அவசியம் சென்று தொழ வேண்டிய அரனார் ஆலயங்களில் ஒன்று .

author avatar
Parthipan K