பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

0
83

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெற இருக்கிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 2ஆயிரம் இடங்களில் பிரச்சினை ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குசாவடிகள் மற்றும் அந்த பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அங்கு விரைந்து செல்ல ஏதுவாக 846 அதிரடி படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் மாநகர பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை நடைபெறும் தேர்தலின்போது 17,788 போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தேர்தல் களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையம் முன்பு தனித்தனியாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்.

வாக்குச்சாவடிகளில் 4 அல்லது 5 மையங்கள் வரை இடம்பெற்றிருக்கும். இப்படி தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்கள் முன்பும் தலா ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். தேவை இல்லாத நபர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்வதை தடுப்பதற்காக நுழைவு வாயிலிலும் ஒரு காவலர் நாளை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்.

author avatar
Parthipan K