அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

0
63

அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர் மற்றும் திருச்சி பாரதிதாசன் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு, இதற்கு முன் கல்லூரிகளில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், கல்வியாளர்கள் இடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர் மற்றும் திருச்சி பாரதிதாசன் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளன. மேலும், இந்த தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K