ஆஹா பேஷ் பேஷ் தமிழக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்! எதற்காக தெரியுமா?

0
93

ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறை படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய ஜனசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் தமிழக அரசு வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் குறிப்பாக தமிழகத்தில் பாஜக, திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்று தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இப்படியான சூழ்நிலையில்தான் சென்னை எம் ஆர் சி நகரில் நட்சத்திர விடுதியில் நடந்த ஜல்ஜீவன் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தமிழக அரசை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அந்த நிகழ்ச்சிகள் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் அந்தத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மையான மற்றும் தடையில்லாத குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் ஓடும் உபரி நீரை அதன் அருகில் இருக்கின்ற பகுதிகளில் தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை பற்றியும் விவாதம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜல்ஜீவன் துறையில் அதாவது ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுவரையில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த இலக்கில் 55.5% குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய சராசரி என்பது 53.96% தான். தேசிய சராசரியை விட அதிக இணைப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஏற்கனவே இதற்காக தமிழக அரசை பாராட்டி அக்டோபர் மாதம் 2ம் தேதி விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் இந்த வருடத்தில் 28 லட்சம் இணைப்புகள் தருவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 16 லட்சம் இணைப்புகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.