கொலை மிரட்டல் எதிரொலி! அண்ணாமலைகாக மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

0
69

இதுவரையில் தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்கள் யாரும் இந்த அளவிற்கு செயல்பட்டிருக்க மாட்டார்கள் என பதவிக்கு வந்த உடனேயே நிரூபித்துக் காட்டியவர் அண்ணாமலை.

இதற்கு முன்பாக இந்த தலைவர் பதவியிலிருந்த தமிழிசை சௌந்தரராஜன் மிகவும் திறம்பட செயல்பட்டார், அதேபோல அவருக்குப்பின் இந்த பதவியை அலங்கரித்த தற்போதைய மத்திய அமைச்சர் முருகன் மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வரிசையில் தற்போது அண்ணாமலை பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல ஆளும் கட்சியினர் செய்யும் தவறை நேரடியாக சுட்டி காட்டி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.இந்த நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆகவே அவருக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆராய்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலைக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற 2 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது. இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து நுண்ணறிவு பிரிவினர் தயாரித்திருக்கக்கூடிய அறிக்கையில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப் பட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னரே அண்ணாமலைக்கு மாநில அரசால் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. அதுதொடர்பாக அண்ணாமலை தன்னுடைய ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலைக்கு திருநெல்வேலி மேலப்பாளையத்தை சார்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் வைத்து அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4வது இடத்தில் இருக்க கூடிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படுகின்றது.

அதனடிப்படையில், அண்ணாமலைக்கு 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.