உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து 

0
114
Ponmudi
Ponmudi

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் அந்த அளவுக்கு அவர் பணியாற்றினார் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டவர் அவர். ஒன்றரை ஆண்டுகள் தாமதமாகத்தான் அவருக்கு இந்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு எந்த துறையை வழங்குவது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதி திறமைமிக்க இளைஞர். சிறு வயதில் இருந்தே அவரை எனக்கு நன்கு தெரியும். திரைத்துறை, அரசியல்துறை என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுபவர். சட்டமன்ற உறுப்பினராக சிறிது காலம் அவர் பயிற்சி பெற வேண்டும் என்று முதல்வர் நினைத்துள்ளார். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் இளைஞராக உதயநிதி செயல்படுவார். உதயநிதியை அமைச்சராக்க வேண்டாம் என்று திமுகவில் யாரும் கூற மாட்டார்கள்.

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு புதிது இல்லை. அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது தெரியும். சட்டமன்றத்தில் 10 சதவீதம் வாரிசுகள் இருப்பார்கள். வாரிசு அரசியல் எல்லா கட்சியிலும் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.