2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

0
70

100 நாட்கள் கொண்ட பரப்புரையை திருக்குவளையில் நாளைய தினம் ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக கடந்த ஐந்து வருடங்களாக காத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய தேர்தல் பணிகளை ஆரம்பித்து இருக்கின்றது. அதேசமயம் ஆளும் கட்சியான அதிமுகவும் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

திமுகவுடைய முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முதல் முறையாக களம் காண இருக்கும் நிலையில், இந்த தேர்தலுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கின்றது. ஆளும் தரப்பின் குறைகளை தொடர்ச்சியாக மக்களுக்கு எடுத்துக் கூறி வரும் ஸ்டாலின் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விடுவார் என்று அந்த கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். அதற்கான பணிகளை ஐபேக் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், அந்த கட்சிக்கு அதிக பலத்தை சேர்க்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க இருக்கின்றார். 100 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு உதயநிதி முடிவெடுத்து இருக்கின்றார். திமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருப்பதாக உதயநிதி அறிவித்திருக்கிறார். முதல் கட்டமாக நாகை, திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பரப்புரை செய்ய இருக்கின்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அந்தக் கட்சி பல வியூகங்களை வகுத்து முதல்கட்டமாக உதயநிதி ஸ்டாலினை களமிறக்கி இருக்கின்றது.

2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலின் எதிர் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.