மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

0
146
#image_title

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காமல் மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர். ஓராண்டாக இந்த குழுவினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர் .

இந்த நிலையில், அண்மையில் ஒருங்கிணைப்பாளரும், உறுப்பினருமான ஜவகர் நேசன் ராஜினாமா செய்தார். அதிகாரிகள் தலையீடு இருக்கிறது என்றும், அரசின் கருத்திருக்கு மாறாக குழு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர் .

இந்த நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், முருகேசன் தலைமையிலான குழுவினர் வெளிப்படையாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியை செய்து வருவதாகவும், அதில் அதிகாரிகள் தலையீடு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் குழுவில் இணைந்து பணியாற்ற சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானமணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பழனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். குழுவின் பணிகளை முடிப்பதற்கு ஏதுவாக நான்கு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் , அதன்படி செப்டம்பர் இறுதிக்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் உரிய முடிவை எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha