அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்

0
100
TTV Dinakaran Speech in Salem-News4 Tamil Online Tamil News Channel Breaking News in Tamil Today News
TTV Dinakaran Speech in Salem-News4 Tamil Online Tamil News Channel Breaking News in Tamil Today News

அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்

மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இப்படியே தொடர்ந்தால் கட்சி நிலைக்காது என்று உணர்ந்த டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டார்.

அந்த வகையில் தருமபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். சேலம் மாவட்ட அமமுகவின் சார்பில் கொண்டலாம்பட்டி அடுத்த பூலாவாரி பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தினகரன் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் என்பதால் இங்கு தங்களுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, நிர்வாகி ஒவ்வொருவரும் தலா 100 பேரை கூட்டத்துக்கு அழைத்து வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், நிர்வாகிகள் கூட்டம் என்பது செயல்வீரர்கள் கூட்டமாக மாறி திருமண மண்டபமே நிரம்பி வழிந்ததிருக்கிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன், “ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அவர்களே… உங்களுடைய அதிகாரம் எதுவரை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சின்னம்மாவிடம் தவழ்ந்து தவழ்ந்து எப்படி பதவி பெற்றீர்கள் என்பதும் தெரியும். அமமுகவினர் நிர்வாகிகள் மீது இருக்கும் பழைய வழக்குகளை தூசுத் தட்டி உளவுத் துறையினர், போலீஸ் மூலம் மிரட்டி உங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறீர்கள். இந்த பிள்ளை பிடிக்கும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.

இறுதியாகப் பேசிய தினகரன், “தமிழகத்தில் அமமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆணிவேராக இந்த இயக்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் தொண்டர்கள்தாம். இதனால்தான் அமமுகவினரை வலைவீசி பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அமமுக ஆளுங்கட்சியாக வளர்ந்துவிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்” என்று பேசியவர்,

மேலும் “தலைமைக் கழகம் ஆரம்பித்து கிளைக் கழகம் வரை நமது நிர்வாகிகளை உளவுத் துறை வைத்து மிரட்டி இழுக்கிறார்கள். தொழில் செய்பவர்களைக் குறிப்பாக காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டியும், உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பளிப்போம் என ஆசைவார்த்தை கூறியும் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். பலவீனமாக இருப்பவர்கள் அவர்கள் பக்கம் சென்றுவிடுகிறார்கள்” என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கட்சியில் சிலர் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் வெளியேறுகிறார்கள். இது தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கம். எந்த கொம்பனாலும் அமமுகவை அழிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K