சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

0
74

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் திடீரென்று புதுடெல்லி கிளம்பிச் சென்று அங்கே பாஜகவின் தலைவரை சந்தித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரையிலே சசிகலா விடுதலை ஆக கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பம் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்குள் சசிகலா விடுதலை ஆகவேண்டும் அதிமுக, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு தேர்தலை சந்தித்தால், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருக்கின்ற முக்குலத்தோர் சமூகத்தின் ஓட்டுக்களை முழுமையாகப் பெறலாம். என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உளவுத் துறையில் இருந்து வந்த ஒரு அறிக்கை சசிகலா தண்டனை காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை என்றால் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கும் என்று டெல்லிக்கு ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறார்கள்.

என்ன நடந்தாலும் சரி, சசிகலா மறுபடியும் அரசியலுக்குள் நுழையவே கூடாது என பிரதமர் உறுதியாக இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.

சசிகலா உடைய விடுதலையை முன்வைத்து இதுபோன்ற அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்து வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்பதற்காக மிக சிறப்பான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

நேற்றைய தினம் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஜே.பி .நட்டா போன்ற பாஜகவின் முக்கிய தலைவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்துவரும் சசிகலா மிகவும் சுதந்திரமாக இருப்பதற்கு, சிறை அதிகாரிகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக சிறப்பு டி.ஐ.ஜி ரூபா டி.ஜி.பி மற்றும் கர்நாடக உள்துறைக்கு புகார் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அவர் அனுப்பிய அந்த புகாரை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது அப்போது இருந்த கர்நாடக மாநில அரசு. இந்த விசாரணைக்கு பிறகு அந்த அறிக்கையிலே, சிறை விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதும், பணம் கொடுக்கப்பட்டதற்கும் ஆதாரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார்.

அவர் தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, அப்போதைய கர்நாடக மாநில அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் சிறை துறை முன்னாள் டி .ஐ.ஜி சத்யநாராயணா ராவ் மீது ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

கையூட்டாக பணம் வாங்கியதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்த லஞ்சத்தை கொடுத்தது யார் என விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அந்த குற்றப்பத்திரிகையிலே பணம் கொடுத்தவர் சசிகலா என தெரிவித்து விட்டு நீதிமன்றம் மூலம் சிறைத்துறை அதிகாரியிடம் அரஸ்ட் வாரண்ட் ஒன்றை ஒப்படைத்து விட்டால் இவ்வழக்கில் சசிகலாவை தொடர்ச்சியாக சிறையிலேயே வைத்திருக்க இயலும். இவ்வாறு ஒரு திட்டமானது நடந்து கொண்டிருப்பதை தெரிந்து கொண்டுதான் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காக, விரைவாக டெல்லிக்குச் சென்று இருக்கின்றார் டி.டி.வி தினகரன் என்று சொல்கிறார்கள் உளவுத்துறை வட்டாரங்களை சார்ந்தவர்கள்.

முன்னரே சென்ற செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி டி.டி.வி தினகரன் புதுடில்லிக்கு போய் வந்தார். அந்த சமயத்திலே அவர் பாஜகவின் பிரமுகர்களை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலே சுமார் மூன்று மாதங்கள் போனபிறகு, இப்பொழுது மறுபடியும் புதுடில்லிக்கு பறந்து இருக்கின்றார் டி.டி.வி. தினகரன்.