ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

0
79

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அதிமுகவின் உள்விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைய வேண்டும் என்று பிரதமரோ அல்லது அமித்ஷாவோ பேசியதில்லை.

இனிவரும் காலங்களிலும் அப்படி எதுவும் நடக்காது. பாஜக தேசிய கட்சி, தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை இருக்கும் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது.
பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணத்தை கொள்ளை அடித்தது திமுக ஆட்சி.

கமிஷன், கலெக்ஷன், கரெக்ஷன் தான் திமுகவின் ஆட்சியில் இருக்கிறது. செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியை பற்றி பேச மாட்டார், எங்களை பற்றி தான் பேசுவார், முதலமைச்சரின் ஊது குழலாக அவர் செயல்பட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும், அதற்கு என்ன வழியோ அதனை செய்து கொண்டிருக்கிறார். இதை நாங்கள் சொல்லவில்லை அந்த கட்சியைச் சார்ந்தவர்களே தெரிவித்திருக்கிறார்கள் என பேசியிருக்கிறார் ஜெயக்குமார்.

ஆளுநரை சந்தித்தபோது அரசியல் தொடர்பாக பேசவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது அது தொடர்பாக புகார் வழங்கப்பட்டது என்று கூறினார். பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலமாக நிரந்தர தீர்வு காணப்பட்டுவிட்டது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதோடு பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்கு அதிமுக கூட்டணியில் நிச்சயமாக இடமில்லை. திமுகவின் ஊதுகுழலாக செயல்படும் பன்னீர்செல்வம் அதிமுகவில் எப்படி இணைய முடியும்? என்று ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.