உங்களுடைய போனில் இனி ட்ரூகாலர் தேவையில்லை! வருகிறது புதிய அப்டேட்!

0
114

மொபைல் பயனர்கள் ஸ்பேம் கால்களின் பிரச்சனையிலிருந்து விடுபடும் விதத்தில் புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் டெலிகாம் ரெகுலேட்டர் ஆன ட்ராய் மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அடுத்த 3 வாரங்களுக்குள் கேஒய்சி மூலமாக சரிபார்க்கப்பட்ட மொபைல் போன் காலர் ஐடென்டிட்டி சிஸ்டமை வெளியிட உள்ளது.

ட்ராய் வெளியிட உள்ள இந்த புதிய அம்சம் மூலமாக தங்களுடைய மொபைலுக்கு சேமிக்கப்படாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது அந்த அழைப்பு செய்பவரின் பெயர் திரையில் தோன்றும் இந்த அம்சம் செயல்பட கேஒய்சி உதவுகிறது.

எப்படி என்றால் ஒருவர் தங்களுடைய சிம் கார்டை வாங்கும்போது நிரப்பப்பட்ட அல்லது நிரப்பப்படும் படிவத்தில் யாருடைய பெயர் கொடுக்கப்படுகிறதோ. அந்த நபரின் பெயர் மொபைல் தொடுதிரையில் தோன்றும். இந்த புதிய அம்சம்காரணமாக ஸ்பேம் கால்ஸ் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். பிரபலமான ட்ரூ காலர் ஆப்பிற்கு மாற்றாக அரசு தரப்பில் இந்த காலர் ஐடி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஸ்பேம் கால்களால் யூசர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய பலகட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி டி வகேலா தகவல் தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், புதிய தொழில்நுட்பங்களை சமூகமாக ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் மாநில மற்றும் நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதையும் உறுதி செய்ய ஒழுங்குமுறை மற்றும் சட்ட கட்டமைப்பை புதிய முன்னேற்றங்களுடன் தக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த புதிய தொழில்நுட்ப உலகில் மல்டிபிள் ஸ்கிரீன் சேம் கன்டென்ட் என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாத்தியமான சீரமைப்பு தொடர்பாக நாம் ஆலோசிக்க வேண்டும். முந்தைய வருடங்களின் வழக்கமான தொழில்நுட்பங்களுக்கும், புதிய தொழில்நுட்பங்களுக்கும் இடையில் நாம் ஒழுங்குமுறை ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கக் கூடாது. ஆனாலும் அதே சமயம் புதுமை மற்றும் போட்டியையும் நாம் தடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர இருக்கின்ற இந்த புதிய அம்சத்தின் மூலமாக மொபைல் போன் யூசர்களின் மொபைலில் லைவ் நேம் டிஸ்ப்ளே செய்யப்படும் என்ற காரணத்தால் போலி அழைப்புகளை தவிர்க்கலாம்.

டெலிகாம் துறையின் விதிகளின் அடிப்படையில் இந்த சிஸ்டம் ஆக்டிவேட் ஆகும் போது கேஒய்சி அடிப்படையில் அழைப்பவரின் பெயர் எதிர்முனையில் இருப்பவரின் திரையில் தோன்றும் என்பதால் மோசடி நோக்கத்திற்காக கால் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்று தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

தேவையற்ற அழைப்புகளின் தொந்தரவிலிருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற டெலிகாம் ரெகுலேட்டர் வழங்கும் இந்த வசதி மிக விரைவில் அனைத்து ஃபோன்களிலும் செயல்படுத்தப்படும்.

இந்த அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு மொபைல் யூஸர்கள் வேறு எந்த ஆப்சின் துணையும் இல்லாமல் தங்களுடைய மொபைல் நம்பருக்கு கால் செய்பவர்களுடைய பெயர்களை பார்க்கும் வசதிகளை பெறுவார்கள்.

அதாவது இந்த அம்சம் நேரடியாக அழைப்பவரின் பெயரை வெளிப்படுத்தும் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அழைப்பவரின் நம்பருக்கு பதில் அவருடைய பெயர் கேஒய்சி அடிப்படையிலான காலர் ஐடென்டிட்டி சிஸ்டம் மூலமாக காட்டப்படும்.

பெரும்பாலானோர் தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்க ட்ரூகாலரை பயன்படுத்தி வருகிறார்கள் .தற்போது ட்ரூ காலர் ஆப் மூலமாக நமக்கு முன்பின் தெரியாத எண்ணில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனாலும் இதில் காணப்படும் அழைப்பாளர்களின் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதோடு ட்ரூ காலர் செயலியில் டேட்டாக்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது.