“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!

0
69

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படாமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று உயிரிழந்த அந்தப் பெண்ணின் கணவர் கைப்பேசி எண்ணிற்கு, “கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இறந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டதால் சென்று கூட பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

author avatar
Parthipan K