TN Opposite Party Leader M K Stalin Urges ADMK Government to take Immediate Action against Dengue-News4 Tamil
TN Opposite Party Leader M K Stalin Urges ADMK Government to take Immediate Action against Dengue-News4 Tamil

டெங்குவை ஒழிக்க தமிழகத்தில் மெடிக்கல் எமெர்ஜென்ஸியை அறிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஒவ்வொரு நாளும் டெங்குவை பற்றிய பயம் மக்களிடம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மெடிக்கல் எமெர்ஜென்ஸியை அறிவித்து இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்து விடாத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் குழந்தைகளும், பெரியவர்களுமாக ஒவ்வொரு நாளும் டெங்கு காய்ச்சலுக்கு மடிந்து மாய்ந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

TN Opposite Party Leader M K Stalin Urges ADMK Government to take Immediate Action against Dengue
TN Opposite Party Leader M K Stalin Urges ADMK Government to take Immediate Action against Dengue

ஒவ்வொரு ஆண்டும் டெங்குக் காய்ச்சல் வந்தாலும், கடந்த ஆண்டு மட்டும் 158-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும், இந்த ஆண்டு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தங்கள் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதிலும், கமிஷன் – கலெக்‌ஷனில் காலத்தைச் செலவிடுவதிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 3 பேர் மரணம், 5 பேர் மரணம் என்றெல்லாம் வரும் அதிர்ச்சிச் செய்திகள் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. டெங்குக் காய்ச்சல் பற்றி ஆய்வு செய்ய 2017-ல் தமிழகம் வந்த எய்ம்ஸ் பேராசிரியர் அஸ்தோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய கமிட்டி, “தமிழகத்தில் 2011 முதல் 2017 வரை 54 ஆயிரம் பேரும், 2017-ல் மட்டும் 23,035 டெங்குவால்  பாதிக்கப்பட்டார்கள்” என்று அறிக்கை அளித்தும், அ.தி.மு.க. அரசு இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

பருவமழை தொடங்கும் முன்பே சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல் – கமிஷன் கலாச்சாரத்திலேயே மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை நிர்வாகம், தூய்மையான குடிநீர் விநியோகம் எதையுமே செய்யாமல் அலட்சியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட பரவி வரும் இந்தக் கொடிய காய்ச்சலை தடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இல்லை; அங்கு மருந்துகளும் இல்லை என்றும் வரும் செய்திகள் கவலையளிக்கிறது.

பெயரளவிற்கு சில மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதாக “விளம்பரம்” செய்துகொள்ளும் இந்த அரசு, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடக்கும் குப்பைகளைக் கூட இன்னும் முழுமையாக அள்ளவில்லை. தெருக்களில் எங்கு பார்த்தாலும் கிடக்கும் குப்பைகளும், மழைத் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் காட்சிகளும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்திற்குக் கண்கூடான சாட்சிகளாகின்றன.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசின் ஊழலால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகமே நிலைகுலைந்து நாற்றமடித்து, ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட இந்த அ.தி.மு.க. அரசு மனம் இரங்கவில்லை – மக்களைப் பாதுகாக்க விழித்தெழுந்து உணர்ச்சியோடு பணியாற்றவில்லை என்பது வெட்கக்கேடானது – மிகுந்த வேதனைக்குரியது.

டெங்குவை ஒழிக்க தமிழகத்தில் மெடிக்கல் எமெர்ஜென்ஸியை அறிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
TN Opposite Party Leader M K Stalin Urges ADMK Government to take Immediate Action against Dengue Fever

மாநிலத்தில் “மெடிக்கல் எமெர்ஜென்ஸி” அறிவித்து, இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்துவிடாத வகையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கிட அ.தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உயிர்பறிக்கும் டெங்குக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு முழு அளவில் ஏற்படுத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்