தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

0
89
corona
corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்ட கொரோனா தொற்று குறித்த செய்திக்குறிப்பில், 99,246 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் எடுத்ததாகவும், இதில், 11,986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்திருப்பதாக நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் 3,711 பேருக்கும், செங்கல்பட்டில் 1,029 பேருக்கும், கோவையில் 686 பேருக்கும் அதிக அளவாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 79,804 ஆக உள்ளது. இதில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 28,005 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் மட்டும் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,574 பேரும், திருவள்ளூரில் 3,419 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றையும் சேர்த்தால், பாதிக்கும் அதிகமானோர் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் மிகவும் மோசமான நிலையில் சென்னை இருப்பதும், இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதும் இந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சென்னையில் அனைவருக்கும் கொரோனா ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதிலும், அண்மையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், அவர்களில் யாருக்கேனும் தொற்று இருந்தால், அவர்களது உறவினர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் ஆய்வு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கண்டறிந்து தடுக்க முடியும். இதனை தமிழக அரசுக்கு கோரிக்கையாக பலர் தெரிவித்து வருகின்றனர்.