குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

0
98

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ம் தேதி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த அணிவகுப்பில் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்கள் சார்பாகவும், அந்தந்த மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை பறைசாற்றும் விதத்தில் அந்தந்த மாநில கலாச்சாரங்கள் தொடர்பாக வாகனங்கள் மிடுக்காக வலம் வரும்.

அந்த விதத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இதேபோல ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தின் சார்பாகவும் அலங்கார வாகனம் பங்கேற்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்து வருகிறது, தமிழக அரசு சார்பாக வேலுநாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், குடியரசு தின விழா அணிவகுப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திகள் மறுக்கப்பட்டிருந்தது ஏமாற்றம் வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் வலியுறுத்தியிருக்கிறார்.