அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன்

0
77
VCK Thirumavalavan
VCK Thirumavalavan

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன்

கையை கட்டிய விவகாரத்தில் அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ளது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சியான திமுகவின் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த சந்திப்பின்போது திருமாவளவனை முறையாக நடத்தவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

அதாவது இந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க அவரை சந்திக்க வந்த திருமாவளவன் ஒரு உடைந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அந்த புகைப்படத்தில் அவர் அமைச்சருக்கு முன்பு பணிவாக கைகட்டிய நிலையில் அமர்ந்திருந்தது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

 

இதனையடுத்து சமூக நீதியை பற்றி பேசும் திமுக அமைச்சர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா? அரசியலுக்காக திருமாவளவன் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து போகலாமா?என சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.குறிப்பாக அதே அமைச்சர் மற்ற தலைவர்களை சந்திக்கும்போது எப்படி நடந்து கொண்டார்.திருமாவளவனுடன் நடந்த சந்திப்பின்போது எவ்வாறு நடந்து கொண்டார் என தொடர்புபடுத்தி விமர்சனம் செய்து வந்தனர்.மேலும் இதில் சிலர் திருமாவளவன் தற்போது அரசியல் எதிரியாக கருதும் பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தொடர்புபடுத்தி விமர்சித்து வந்தனர்.

Thirumavalavan with Ramadoss
Thirumavalavan with Ramadoss

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்த திருமாவளவன், ‘’அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் அங்கு இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு பணிந்து போக என்ன தேவையிருக்கிறது? நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே இல்லையே. என்னை பிடிக்காத நபர்கள், குதர்க்கவாதிகள், என்மீது காழ்ப்புணர்ச்சியை கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது ஏதாவது சேரு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனை நான் ஓருபோதும் பொருட்படுத்த மாட்டேன். எனது நலனில் அக்கறை உள்ளவர்கள் கேட்டால் இதற்காக நான் பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இவ்வாறு கைகட்டுவது என்னுடைய மேனரிசம். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அது அவர்களது இயலாமை, ஆற்றாமையை தான் காட்டுகிறது’’ என ஏற்கனவே இதற்காக விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவாதம் அத்துடன் ஓயாமல் மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.இந்நிலையில் இது குறித்து மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன், எப்போதுமே நிலக்கிழார், பண்ணையாருக்கும் உழைப்பவர்களை கண்டு அச்சம் இருக்கும். அந்த அச்சத்தால் தான் நிலக்கிழார்கள் கையை கட்ட வைக்க வைக்கிறார்கள். அவர்கள் பயந்து கொண்டு எங்கே தன்னை அடித்து விடுவார்களோ என்கிற அச்சத்தால்தான் அவனை நிராயுதபாணியாக்கி கையைக் கட்டி நிற்க வைப்பார்கள். நான் கையகட்டி உட்கார்ந்திருந்தால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று அர்த்தம்… அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என இது குறித்து மீண்டும் விளக்கமளித்துள்ளார்.