இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை! ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து!

0
155

ரஷ்யாவிற்கும், உக்ரைன் நாட்டிற்குமிடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது. இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆதரவு வழங்கி வருகின்றன.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருக்கிறது.

இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் மீது முழுமையான படையெடுப்புக்கு தேவைப்படும் ராணுவப் படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் ரஷ்யா மற்றும் பெலாரஸ் உள்ளிட்டவை ஒன்றிணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி ஆரம்பித்திருக்கின்றன. ரஷ்யாவின் சுமார் 30,000 ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். என்ற தகவல் வெளியானதால் உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க மக்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அதோடு அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகள் மோதிக்கொள்ளும் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் ரஷ்யாவுடன் பெரும் மோதலை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுவது நல்லது என்று ஜோ பைடென் என் பி சி செய்திக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய படைகளின் ஒன்றை நாங்கள் கையாளுகிறோம் இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை என்று ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.