மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!!

0
101
#image_title

மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!!

தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்ற மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர், திட்டையை சேர்ந்த தேவிநடராஜன், மணிகிராமத்தை சேர்ந்த தேன்மொழிதமிழ்வாணன் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் தாட்கோவில் தாழ்த்தப்பட்டவருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனுக்கொடுத்துள்ளனர்.

அவர்களது மனுக்களை விசாரித்து தாட்கோ அதிகாரிகள் கடந்த 31.5.2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த நாகை மாவட்டமாக இருந்தபோதே சீர்காழி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த வங்கியில் இருந்து தாட்கோ மானியத்துடன் கூடிய கடன்கொடுக்காமல் அலைகழித்து வந்துள்ளனர்.

மயிலாடுதுறை தனிமாவட்டமாக உருவாகியபிறகு தொடர்ந்து பலமுறை மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனுஅளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 4 வருடங்களாக தொடர்ந்து கடன்பெற அலைகழிக்கப்பட்டதால் பாதிபேர் அதற்கான முயற்சியை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் அலெக்சாண்டர், தேவிநடராஜன், தேன்மொழிதமிழ்வாணன் ஆகியோர் தாட்கோ கடன்கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்பதாகவும், 4 வருடங்களாக கடன்பெற முடியாமல் அலைகழிக்கப்படுவதை விளம்பரபலகையில் எழுதிக்கொண்டு குறைத்தீர் கூட்டத்தில் மனுகொடுக்க வந்தனர்.

குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணி நிமித்தமாக கூட்டத்திலிருந்து வெளியேறினார். மாவட்ட ஆட்சியர் காரில் ஏறி புறப்பட்டபோது தாட்கோ கடன் வழங்கக்கோரி காரை வழிமறித்து அலெக்சாண்டர் உள்ளிட்ட மூவரும் தர்ணாவில் ஈடுபட்டனர். உடன் அவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துபேசி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Savitha