அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பணமில்லை! கடுமையான பஞ்சத்தை நோக்கி நகர்கிறதா இலங்கை

0
64

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றன.

அன்றாட தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட விலைகளும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களான காய்கறியின் விலை நிலவரங்கள் அதிகரித்ததால் அந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் குதித்தார்கள்.

இந்த நெருக்கடியின் காரணமாக, பிரதமர் பதவியை வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார்.

இதனை தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு அவர் பிரதமராக மட்டுமல்லாமல் அந்த நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு கூட பணம் இல்லை இதன் காரணமாக, நாடு கடுமையான பஞ்சத்தை நோக்கி செல்கிறது என்று அதிகாரிகள் கவலை அடைந்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நோய் தொற்று பாதிப்புக்கு பிறகு இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து தவித்து வருகிறது. சுற்றுலா மூலமாக அந்த நாட்டிற்கு கிடைத்த வரும் அந்நிய செலாவணி அடியோடு நின்று போய்விட்டது.

அதோடு மஹிந்த ராஜபக்ஷ அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது.

எரிவாயு எரிபொருள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு அன்னிய செலாவணி இல்லாததால் இலங்கையில் பல மணி நேரம் மின்வெட்டு உண்டாகி பெரும்பாலான உணவு விடுதிகள் மூடப்பட்டிருக்கின்றன.

அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்ருக்கிறார்கள்.

இந்த நிலையில். அண்டை நாடான இந்தியா போன்ற சர்வதேச நாடுகளும் உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன அந்த நாட்டிற்கு. இருந்தாலும்கூட நாட்டின் இன்னல்களுக்கு இதுவரையில் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

பொதுமக்களின் துயரங்களும் முடியாமல் தொடர்ந்து வருகிறது அதோடு அந்த நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்வதாகச் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கை அதிபரின் வரம்பற்ற அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் விதத்தில் 21ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உண்டாகவில்லை, அதிலும் குறிப்பாக ஆளும் இலங்கை மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த கட்சியில் ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகளாக கருதப்படும் பலரும் அதோடு ராஜபக்சேவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை எதிர்த்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசன திருத்தங்களை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் அதுதான் முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச உதவியை பெற வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்திருத்தம் அவசியம் என்று வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இதன்காரணமாக, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உண்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.