டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

0
106

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! கோரியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

இருக்கையை மாற்றி தரக் கோரி நடுவானில் விமானத்தில் பெண் ஒருவர் செய்த அநாகரிக செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச்  சொந்தமான யூகே 256 என்ற விமானம் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திடீரென 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் பாவ்லோ பெருசியோ. இத்தாலியைச் சேர்ந்த அந்தப் பெண் எக்கனாமிக் பிரிவில் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் விமானம் புறப்பட்டதும் திடீரென பிசினஸ் இருக்கையில் சீட் வேண்டும் என கோரி தகராறில் ஈடுபட்டார். அடுத்த அதிர்ச்சியாக அவரது ஆடைகள் சிலவற்றை கலைந்து அரை நிர்வணமாக அங்கும் இங்கும் அலைந்து அனைவருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டதாக விஸ்தாரா நிறுவனத்தின் செய்தியாளர்  கூறினார். மேலும் அவர் விஸ்தாரா விமான நிறுவனம் தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மாண்புக்கு எந்தவித இடையூறு ஏற்படுவதையும் பொறுத்துக் கொள்ளாது. அதேபோல் விமான ஊழியர்களின் பாதுகாப்பையும் மாண்பையும் உறுதி செய்ய தவறாது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் விமானி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டார். அதேபோல் விமானம் தரையிறங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார். இதுப்பற்றி எங்கள் விமான நிறுவனம் ஆனது முறையான அறிக்கையை வெளியிட்டு விட்டது. என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மும்பை விமான நிலைய போலீசார் விஸ்தாரா விமானம் தரையிறங்கியதும் அதன் பணியாளர்கள்  அநாகரிகமாக நடந்த பெண் பயணி மீது புகார் தெரிவித்து விட்டதாக கூறினர். இந்த புகாரை அடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விஸ்தாரா விமான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.

தற்போது விமானங்களில் இது போன்ற ஏராளமான அதிர்ச்சியான சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி விட்டது. ஏற்கனவே பெண் பயணி மீது சிறுநீர் கழித்து விவகாரம், முதியவர் ஒருவர் விமான பணிப்பெண்ணை தவறாக தொட்ட விவகாரம் என நிறைய சம்பவங்கள் விமான போக்குவரத்தில் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது விமான போக்குவரத்து துறை கையில் உள்ளது.