வாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!

0
84

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணி புரிந்து வரும் ஒருவர் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் 2வது வாய்ப்பாடு ,ஒப்புவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு மாணவனிடம் வாய்ப்பாடு ஒப்புவிக்குமாறு கேட்டுள்ளார். அந்த மாணவனுக்கு வாய்ப்பாடு சரிவர சொல்ல தெரியவில்லை என்ற காரணத்தால் ஆத்திரம் கொண்ட அந்த ஆசிரியர், பள்ளியில் இருந்த ட்ரில்லிங் மிஷினை வைத்து மாணவனின் கையை நீட்ட சொல்லி துளை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை கவனித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவன், உடனடியாக சென்று அந்த துளையிடும் இயந்திரத்தின் ஒயரை பிடுங்கியதன் காரணமாக, சிறிய காயத்துடன் அந்த மாணவன் தப்பினான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அந்த மாணவனின் பெற்றோர் மாணவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறிய சிகிச்சைக்கு பிறகு அந்த மாணவன் வீடு திரும்பினான்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் வழங்கினர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அந்த ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு துறை ரீதியான விசாரணைக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியரின் பெயர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.