கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

0
75

கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கின்ற கொடநாடு எஸ்டேட்டில் அதன் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான ஆணை சென்ற வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரியாக கோயமுத்தூர் சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை, வினோத், உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

அத்துடன் மேற்கு மண்டல காவல்துறையில் புலனாய்வில் சிறப்பாக செயல்படும் 3 காவல்துறை ஆய்வாளர்கள் 5 துணை காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உதவியாக இருக்க 36 காவலர்களும் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழு தொடர்பான விவரங்களை டிசம்பர் மாதம் 2ம் தேதி உதகமண்டலத்தில் இருக்கின்ற மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவிக்க இருக்கிறார்கள்.