மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்! அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ்!

0
72

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமென்று திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்களான நிலையில் அது தொடர்பாக ஆளும் தரப்பு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை 1000 ரூபாயாகவும் கடுமையான பாதிப்பை கொண்டவர்களுக்கு 1,500 ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1700 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம்தோறும் 3800 ரூபாயும், தெலுங்கானாவில் 3106 ரூபாயும், வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அதைப்போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை வைத்தது.

இந்தக் கோரிக்கையை நிதிநிலை கூட்டத்தொடரில் அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் நேற்றைய தினம் சென்னையில் போராட்டம் நடத்தப்போவதாக மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, வாலாஜா சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

அப்போது முதலமைச்சரின் அறிவுறுத்தலினடிப்படையில் தமிழக அரசின் நிதி நிலையைப் பொருத்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். சுமார் 1 மணிநேரம் நடத்திய இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.