போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

0
390
#image_title

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தனியார் அமைப்பு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முத்திரையுடன் விழா ஒன்றினை நடத்தி 35 பேருக்கு போலியாக  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்ட இந்த பட்டத்தை பெற்ற நிலையில், அப்படி ஒரு தனியார் நிறுவனமே தற்போது இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த டாக்டர் பட்டத்தை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழாவிற்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு விருந்தினராக மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தேன் என்று நீதிபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விழா நடத்திய அமைப்பாளர்களின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன.

அரங்கை அளித்ததை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த நிகழ்வுடன் இல்லை என பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் பல்கலைகழகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. நீதிபதி இந்த விவகாரத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அரங்கத்தை வாடகைக்கு கொடுத்தோம். இந்த நிகழ்விற்கு பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

மோசடி கும்பலுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நவம்பரில் விழா நடத்த அனுமதி கேட்டனர் நாங்கள் தரவில்லை. அதையடுத்து நீதிபதியின் பரிந்துரை கடிதம் வந்ததால் அரங்கை வழங்கினோம். பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்கது.

மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். சட்டபூர்வமாக இதை அணுக திட்டமிட்டுள்ளோம். மேலும் போலி டாக்டர் பட்டம் வழங்கி விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் தனியாருக்கு அரங்கு வாடகைக்கு கிடையாது என்பதோடு வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம் என்று அவர் தெரிவித்தார்.