தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

0
146

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது,

மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அவர் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42வது தற்கொலை நிகழ்வாகும். சூதாட்டம் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட  பின்னர் நடைபெற்றிருக்கும் 13 வது தற்கொலை சம்பவம். இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும் இப்போது நடந்த தற்கொலைக்கும் கவர்னரே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்களுக்கு மேலாகி விட்டன. அது குறித்து ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி நேரிலேயே தேவையான விளக்கங்களை அளித்து 68 நாட்களுக்கு மேலாகி விட்டன. இனிமேலும் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு இன்றுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல. 

தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக கவர்னருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.