இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

0
155

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து போராட்டம் மேற்கொண்டனர். இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து ஹிஜாப் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் எந்தவொரு மதத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஆடைகளை அணிந்து வரக் கூடாது எனக் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக, உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, கல்லூரிகளை திறப்பது குறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் தலைமையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனையில், புதன்கிழமை (இன்று) முதல் கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு வார விடுமுறைக்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கல்லூரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K