முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

0
163
#image_title

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!

ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படம் ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படம் ஒட்டுவதா என்ற குழப்பத்தில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற வீதத்தில் இந்த கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்பு துறை 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கியது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் பூந்தமல்லியில் இருக்கும் ஒரு யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாக நின்று கொண்டிருக்கின்றது.

இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க 100 சதவீதம் மத்திய அரசின் நிதி மூலமாக வாங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் படத்தை ஒட்டுவதா என்ற குழப்பத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை கொடி அசைத்து திறந்து வைப்பது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதன் காரணமாக இந்த ஆம்புலன்ஸ்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் “அரசியல் காரணங்களுக்காக கால்நடை ஆம்புலன்ஸ் சேவையில் தாமதம் ஏற்படவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாட்டுக்கு நிதி தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள்,  பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு உழியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். இந்த திட்டத்தின் படி மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே சேர்ந்து செயல்பாட்டு செலவுகளை பகிர்ந்து கொள்ளும். 1962 என்ற உதவி எண்ணிற்கு அழைத்தால் கால்நடை சேர்க்கைக்கு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்லும்” என்று அவர் கூறினார்.