சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

0
191
#image_title

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

சிக்னலில் நின்ற லாரி மீது வேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் வயது 27. டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாரிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அவரது பைக் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் அன்பரசன் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் இறந்து போன அன்பரசனின் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா ரமேஷ்பாபு வயது 47. தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன தொழிற்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு கவசங்கள் தைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இதை அடுத்து இவர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மோட்டார் சைக்கிள் தொழிற்சாலைக்கு பாதுகாப்பு உபகரணங்களை தைத்து எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான் சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் மீது இருசக்கர வாகனம் ஏறியதால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை பஸ்ஸின் சக்கரம் ரமேஷ்பாபு மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுபாஷினி விபத்தில் இருந்த ரமேஷ்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பஸ்ஸின் டிரைவர் ரமேஷ் வயது 44 என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.